வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனியில் கடந்த ஒருவார காலமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(நவ.,7) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.08 அடியை எட்டியுள்ளதால் 69 அடிக்கு நீர் மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,310 கன அடியாக உள்ளது
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,310 கன அடியாக உள்ளது. மதுரை மாநகர் மக்களுக்கான குடிநீர் தேவைக்காக மட்டும் தற்போது அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், அணையின் நீர் இருப்பு 5,338 மி.கன அடியாக உள்ளதென்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், இதன் நீர்மட்டம் இன்று மாலை அல்லது நாளை(நவ.,8) காலை 69 அடியினை எட்டும் என்பதால் அதிகாரிகள் அப்பகுதியினை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அணையின் நீர்மட்டம் 70 அடியினை எட்டும் பட்சத்தில், அணையின் மதகுகள் வழியே நீர் திறக்கப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.