மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகளை, குறிப்பாக பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, மத்திய அரசு, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது 53 அதிகாரிகள் அடங்கிய மிகப்பெரிய குழு ஒன்றை ஒருங்கிணைத்து விசாரணையை துவக்கியுள்ளது மத்திய புலனாய்வு துறை. இத்தனை பெரிய குழு, விசாரணைக்கு பணிக்கப்பட்டது இதுவே முதல் முறை எனக்கூறப்படுகிறது. கூடுதல் சுவாரசியமாக, இந்த குழுவில் 29 பெண் விசாரணை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். லவ்லி கட்டியார், நிர்மலா தேவி மற்றும் மோஹித் குப்தா ஆகிய மூன்று டிஐஜிக்கள் அடங்கிய குழுவும் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்வீர் ஆகியோரும் இணைந்து விசாரணை மேற்கொள்வார்கள் எனவும், ஒட்டுமொத்த விசாரணையை இணை இயக்குநர் கன்ஷ்யாம் உபாத்யாய் மேற்பார்வையிடுவார் எனவும் கூறப்படுகிறது.
உள்ளூர் காவல்துறையை ஒதுக்கும் சிபிஐ
பொதுவாக இவ்வளவு பெரிய வழக்குகள், சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் போது, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தை சார்ந்த காவல்துறையும் விசாரணையில் துணை நிற்கும். ஆனால் மணிப்பூரைப் பொறுத்தவரை, விசாரணையில் பாரபட்சமான குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் பங்கைக் குறைக்க CBI அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ஏற்கனவே, மத்திய புலனாய்வு துறை, எட்டு வழக்குகளை இதுவரை பதிவு செய்துள்ளது. அதில், மே 4 அன்று நடைபெற்றதாக கூறப்பட்ட, நாட்டையே உலுக்கிய பழங்குடியின பெண்களின் பாலியல் வன்கொடுமையும் அடங்கும். மணிப்பூர் வன்முறை தொடர்பாக மேலும் ஒன்பது வழக்குகளை சிபிஐ விசாரிக்க உள்ளது. இதன் மூலம், இது வரை 17 வழக்குகளை சிபிஐ கையாண்டுள்ளது.