Loading...
தடுப்புக் காவலில் வைத்ததும் 24 மணிநேரத்துக்குள் ஆஜர்படுத்தபட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
24 மணி நேர அவகாசம் காவலில் வைத்த நேரத்திலிருந்தே தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தடுப்புக் காவலில் வைத்ததும் 24 மணிநேரத்துக்குள் ஆஜர்படுத்தபட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2026
02:01 pm

செய்தி முன்னோட்டம்

காவல்துறையோ அல்லது விசாரணை அமைப்புகளோ ஒருவரை காவலில் வைக்கும்போது, அவரை நடுவரிடம் ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேர அவகாசம் முறையான கைதை பதிவு செய்யும் நேரத்திலிருந்து அல்லாமல், அவரைத் தடுப்புக் காவலில் வைத்த நேரத்திலிருந்தே தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 'தடுப்புக் காவல்' மற்றும் 'முறையான கைது' ஆகிய இரண்டிற்கும் இடையே செயற்கையான வேறுபாட்டைக் காட்டி நீதித்துறை தணிக்கையைத் தள்ளிப்போட அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 'கைது செய்தல்' மற்றும் 'காவலில் வைத்தல்' இரண்டும் இணைந்தே செயல்படுகின்றன. காவலில் வைத்த பிறகு விசாரணையை காரணம் காட்டி கைதை செய்வதும், 24 மணி நேரத்தைக் கணக்கிடாமல் இருப்பதும் அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

நடைமுறை

அரசமைப்புச் சட்டப் பிரிவு 22(2) & BNSS நடைமுறை

நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பின்படி,"அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் தற்காலிக இடைநிறுத்தம் இருக்க முடியாது. கைதான நேரத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல ஆகும் பயண நேரத்தைத் தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் 24 மணி நேரக் கணக்கீட்டிலிருந்து நேரத்தை விலக்க முடியாது."

இனிவரும் காலங்களில், காவலில் வைக்கப்பட்ட நபரை ஆஜர்படுத்தும்போது, அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தைக் கட்டாயம் பதிவு செய்யவும், 24 மணி நேர வரம்பு மீறப்படவில்லையா என்பதை நடுவர்கள் சரிபார்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னணி

வழக்கின் பின்னணி & திரிபுரா நபர்கள் விடுதலை

திரிபுரா மாநிலத்தில் போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட 4 நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தபோது இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

செப்டம்பர் 29,பிற்பகல் 2:00 மணிக்கு சோதனை நடவடிக்கையின்போது அந்த 4 பேரும் அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களின் முறையான கைது அடுத்த நாள் காலை 11:00 மணிக்கே பதிவு செய்யப்பட்டது.

இதனால் சுமார் 18 மணி நேரம் எந்தவித நீதித்துறைத் தணிக்கையும் இன்றி அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

திரிபுரா உயர் நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் இவர்களின் தடுப்புக் காவல் அரசமைப்புச் சட்டப்பிரிவு 22(2)-ஐ மீறிய செயல் எனக்கூறி, 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ADVERTISEMENT