மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT) தனது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது. பாலத்தின் கேபிளில் ஏறக்குறைய பாதி ஒயர்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பழைய சஸ்பெண்டர்கள் புதியவற்றால் வெல்டிங் செய்யப்படிருக்கிறது என்றும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுவே பாலம் சரிந்து விழ வழிவகுத்த சில முக்கிய காரணங்களாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் டிசம்பர் 2022இல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட SIT சமர்ப்பித்த 'மோர்பி பால சம்பவம் குறித்த பூர்வாங்க அறிக்கையின்' ஒரு பகுதியாகும். இந்த அறிக்கையை சமீபத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, மோர்பி நகராட்சியுடன் பகிர்ந்து கொண்டது.
விபத்து நடக்கும் முன்பே உடைந்திருந்த கம்பிகள்
கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இடிந்து விழுந்த மோர்பி தொங்கு பாலத்தின் பராமரிப்புப் பொறுப்பை அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் லிமிடெட் (ஓரேவா குரூப்) ஏற்றுக்கொண்டிருந்தது. பாலத்தின் பழுது, பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் பல குறைபாடுகளை SIT கண்டறிந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால், ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி, மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையின் செயலாளர், தலைமைப் பொறியாளர் மற்றும் கட்டமைப்பு பொறியியல் பேராசிரியர் ஆகியோர் SITயில் உறுப்பினர்களாக இருந்தனர். 1887ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு முக்கிய கேபிள்களில், ஒரு கேபிள் அரிப்பில் பழுதடைந்திருந்ததாகவும், அக்டோபரில் கேபிள் துண்டிக்கப்படுவதற்கு முன்பே அதன் கம்பிகளில் கிட்டத்தட்ட பாதி "ஏற்கனவே உடைந்திருக்கலாம்" என்றும் SIT குறிப்பிட்டுள்ளது.