மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன
வாரணாசியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இதில் 22 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் எஞ்சின் தண்டவாளத்தில் இருந்த பொருள் ஒன்றின் மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று கான்பூர் நகர உதவி ஆட்சியர் ராகேஷ் வர்மா கூறியுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தண்டவாளத்தில் இருந்த ஒரு பொருளின் மீது இயந்திரம் மோதியதால் ரயில் தடம் புரண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு உளவுத்துறை ஐபி விசாரணை
இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் உள்நாட்டு உளவுத்துறையான ஐபி மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜினின் முன் பகுதியில் ஒரு பாறாங்கல் போன்ற பொருள் மோதியதால், குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டு தடம் புரண்டதாக லோகோ பைலட் தெரிவித்தார். ரயில் தடம் புரண்டதன் எதிரொலியாக, சிக்கித் தவிக்கும் பயணிகளை கான்பூருக்கு ஏற்றிச் செல்ல இந்திய ரயில்வே பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அங்கிருந்து அகமதாபாத் நோக்கி பயணம் தொடரும். விபத்து நடந்த இடத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கான்பூர்-ஜான்சி வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்களும் திருப்பி விடப்பட்டுள்ளதாக வட மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ சஷி காந்த் திரிபாதி தெரிவித்துள்ளார்.