கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை நேரில் சென்று பார்வையிட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கொண்ட குழு, 2 நாட்கள் பயணமாக இன்று(ஜூலை 29) மணிப்பூருக்கு சென்றுள்ளது. கனிமொழி(திமுக), டி.ரவிக்குமார்(விசிக), தொல். திருமாவளவன்(விசிக), ஆதிர் ரஞ்சன் சவுத்ரி(காங்கிரஸ்), கௌரவ் கோகோய்(காங்கிரஸ்), பூலோ தேவி நேதம்(காங்கிரஸ்), கே சுரேஷ்(காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ்(திரிணாமுல் காங்கிரஸ்), சுஷில் குப்தா(ஆம் ஆத்மி), அரவிந்த் சாவந்த்(சிவசேனா-யுபிடி), ராஜீவ் ரஞ்சன் சிங்( ஜேடியூ), அனீல் பிரசாத் ஹெக்டே(ஜேடியூ), சந்தோஷ் குமார்(சிபிஐ), ஏஏ ரஹீம் (சிபிஐஎம்), மனோஜ் குமார்.ஜா(ஆர்ஜேடி), ஜாவேத் அலிகான்(சமாஜ்வாதி), மஹுவா மாஜி(ஜேஎம்எம்), பிபி முகமது பைசல்(என்சிபி), இடி முகமது பஷீர்(ஐயுஎம்எல்), என்கே.பிரேமச்சந்திரன்(ஆர்எஸ்பி) மற்றும் ஜெயந்த் சிங்(RLD) ஆகியோர் 20 தலைவர்கள் கொண்ட இந்த குழுவில் அடங்குவர்.
இந்த குழு நாளை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயையும் சந்திக்கவுள்ளது
"அரசியல் பிரச்சினைகளை எழுப்புவதற்காக அல்ல, மணிப்பூர் மக்களின் வலியை புரிந்து கொள்ளவே நாங்கள் அங்கு செல்கிறோம்," என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் இம்பாலுக்கு செல்வார்கள். மணிப்பூரின் மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர்கள் பார்வையிடுவார்கள் என்று காங்கிரஸ் எம்.பி நசீர் உசேன் கூறியுள்ளார். இந்த குழு நாளை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயையும் சந்திக்கவுள்ளது. இந்த பயணத்தின் போது கிடைக்கும் தகவல்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஒருவேளை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், இந்த தகவல்களை வெளியிட செய்தியாளர் சந்திப்பு நடத்துவோம் என காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.