ஜி20 உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் 29 நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள்
ஜி20 உச்சிமாநாடு நடைபெற இருக்கும் அரங்கில், மோனாலிசா மற்றும் 13ஆம் நூற்றாண்டின் மாக்னா கார்ட்டாவின் நகல் உட்பட 29 நாடுகளின் பாரம்பரிய சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. ஜி20 உச்சிமாநாடு நடைபெற இருக்கும் பாரத் மண்டபத்தின் இரண்டாம் தளம், ஜி20 உச்சிமாநாட்டின் பிரதான அறையாக செயல்படும் என்றும், இந்த அறையில், 29 நாடுகளின்(20 உறுப்பு நாடுகள்+ 9 பங்கேற்பாளர்கள்) பாரம்பரிய சின்னங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'கலாச்சார நடைபாதை-ஜி20 டிஜிட்டல் மியூசியத்தின்' ஒரு பகுதியாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்களின் சந்திப்புகள் நடைபெறும் அதே தளத்தில்தான் இந்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, உச்சிமாநாடு நடைபெறும் அறைக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த கண்காட்சியை தாண்டிதான் செல்ல வேண்டி இருக்கும்.
ஜி20 உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் சில பாரம்பரிய சின்னங்களின் பட்டியல்
பாணினி அஷ்டாத்யாயி: சமஸ்கிருதம் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை விளக்கும் இந்த மொழியியல் உரை இந்தியாவின் பாரம்பரிய சின்னமாக காட்சிப்படுத்தப்படும். இந்த நூல் கிமு நான்காம் நூற்றாண்டின் இறுதியில் அறிஞர் பாணினியால் எழுதப்பட்டது. மோனா லிசா: லியோனார்டோ டா வின்சியின் 'மோனா லிசா' ஓவியமும் ஜி20 மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும். மேக்னா கார்ட்டா: இங்கிலாந்தின் மாக்னா கார்ட்டா என்பது 15 ஜூன் 1215அன்று இங்கிலாந்து மன்னர் ஜான் ஒப்புக்கொண்ட அரச உரிமை சாசனமாகும். குட்டன்பெர்க் பைபிள்: ஜெர்மனியில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் இது தான். கோட்லிக்யூ சிலை: இது மெக்சிகோவைச் சேர்ந்த ஆஸ்டெக் சிற்பமாகும். ஆபிரகாமிக் குடும்ப இல்லம்: இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ள ஒரு சமய வளாகமாகும்.