லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று(ஜன 24) நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார். இதுவரை மீட்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. அதே நேரத்தில் குறைந்தது இருவர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர், அவர்களுக்கு வெளிப்புற காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவர்களுக்கு பெரிய காயம் எதுவுமில்லை என்பது தெரியவந்திருக்கிறது.
இடிபாடுகளில் இருந்து இன்று ஒரு பெண்
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சிக்கியுள்ள இருவரையும் கண்டுபிடிக்க ஒருங்கிணைந்த பல முகமைகள் தேடுதல் பணி நடத்தி வருகிறது. இதற்கிடையில், லக்னோ நிர்வாகம், ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள இந்த பல மாடி கட்டிடத்தை கட்டியவர் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற அமைப்புகளின் குழுக்கள் இன்று(ஜன 25) காலை ஒரு பெண்ணைக் காப்பாற்றி உள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.