சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது
சென்னை பெருநகரில் போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன்படி, ஜி2 பெரியமேடு காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்ததன் பேரில், நேற்று(மார்ச்.,21) அல்லிக்குளம் லிங்க் ரோட்டில் கண்காணித்து வந்துள்ளார்கள். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை கண்டு விசாரணை செய்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கைது செய்த 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
அதனையடுத்து அவரை சோதனை செய்தபோது கஞ்சாவினை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை விசாரித்ததில் அவர் பெயர் பிரதீப் கணேஷ் என்னும் முகமது(34) என்றும், அவர் சென்னை காவாங்கரை, புழல் என்னும் பகுதியில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ள நிலையில், அவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதேபோல D-5மெரினா காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் குழுவினர் நேற்று நடத்திய சோதனையில், நேதாஜி சிலை அருகே கஞ்சா விற்பனைசெய்து கொண்டிருந்த தேபானந்த ராவத்(24) ஒடிசா மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்தும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்த இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.