
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தேரோட்ட திருவிழா கோலாகலமாக தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
மதுரையின் சிறப்புமிக்க சித்திரை திருவிழா சில நாட்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற்றவுடன், ஏப்ரல்-20ஆம் சிவபெருமானை மீனாட்சி அம்மன் போருக்கு அழைக்கும் 'திக் விஜயம்' நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 21ஆம் தேதியான நேற்று, மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரர் பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனையடுத்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில், அம்பாளும், சுவாமியும் அதிகாலை ம.முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும், பின்னர் ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியிலும் எழுந்தருளினர். சிறப்பு அலங்காரத்தில், சிவபெருமான் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், மீனாட்சியம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள, காலை 6.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, தேரோட்டம் துவங்கியது.
கள்ளழகர்
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்
மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற அதே நேரத்தில், சித்தரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் புறப்படும் நடைபெற்றது. தங்கை திருமணத்தை காண, கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரை நோக்கி நேற்று புறப்பட்டார். வழிநெடுக பக்தர்களுக்காக மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், நாளை, ஏப்ரல் 23 அன்று வைகை ஆற்றில் இறங்குவார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதன்பின்னர் மண்டூக மகரிஷி மோட்சம் அளித்தபின்னர், குதிரை வாகனத்தில் ஏறி அவர் மீண்டும் அழகர் மலை நோக்கி செல்லும் எதிர்சேவை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்கு கொண்டு செல்லப்பட்டது. அவை இன்று இரவு இறைவனுக்கு சாற்றப்படும்.