LOADING...
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!
121 தொகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2025
08:04 am

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6, 2025) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்தத் தேர்தல் பீகாரின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியைத் தீர்மானிக்க உள்ளதால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் (மகா கூட்டணி) ஆகிய இரு தரப்பினருக்கும் இது மிக முக்கியமான கட்டமாக உள்ளது. மொத்தம் 3.75 கோடிக்கும் மேல் வேட்பாளர்கள் இருக்கும் இந்த பீகார் மாநிலத்தில், இந்த தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள்

களத்தில் நிற்கும் முக்கிய வி.ஐ.பி. வேட்பாளர்கள்

இந்த முதல் கட்ட தேர்தலில், பல முக்கிய அரசியல் தலைவர்களின் தலைவிதி இன்று வாக்குகளின் மூலம் தீர்மானிக்கப்படவுள்ளது. தேஜஸ்வி யாதவ் (இராஷ்டிரிய ஜனதா தளம்): மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான இவர், ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சாம்ராட் சவுத்ரி (பா.ஜ.க): பீகார் துணை முதலமைச்சர்களில் ஒருவரான இவர், தாராபூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். விஜய் குமார் சின்கா (பா.ஜ.க): மற்றொரு துணை முதலமைச்சரான இவர், லக்கிசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். தேஜ் பிரதாப் யாதவ்: இராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி, தன் சொந்தக் கட்சியான ஜனசக்தி ஜனதா தளம் சார்பில் மஹுவா தொகுதியில் போட்டியிடுகிறார். மைதிலி தாக்கூர் (பா.ஜ.க): புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகியான இவர், அலினகர் தொகுதியில் போட்டியிடுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, பிரச்சினைக்குரிய பகுதிகளில் கூடுதல் மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை அச்சமின்றி நிறைவேற்ற தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில பதட்டமான தொகுதிகளில் பாதுகாப்பு கருதி நேரம் குறைக்கப்படலாம்.