
2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் முதல்முறையாக 18 மாத குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2ஆம் தேதி ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினர் தங்கள் 18 மாத ஆண் குழந்தையை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த குழந்தை மேஜையின் மீது ஏறி விளையாடும் போது தலையில் பலத்த அடிபட்டதால் ஆந்திராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதுவரை சிகிச்சை பெற்று வந்தது.
ஆனால், அதன் பின்னும் குழந்தையின் உடல்நிலை மோசமாகி கொண்டே இருந்ததால் குழந்தையை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தை
குறைந்த வயது உறுப்பு கொடையாளர்:
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டது.
இதனையடுத்து, பெற்றோர்கள் அனுமதியோடு அந்த குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன.
பெறப்பட்ட கல்லீரல் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத பெண் குழந்தைக்கும் சிறுநீரகங்கள் வேலூரில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளராக தற்போது இந்த குழந்தை கருதப்படுகிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சில வருடங்களுக்கு முன் ஒரு இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன.
இரண்டரை வயதுக்கும் குறைவான குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை.