சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி
சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதாரமையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் வந்து திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பின்னர் பேசிய அவர், சென்னையின் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பலஆண்டுகளாக பழுதடைந்துள்ள கழிவுநீர் குழாய்களை மாற்றும் பணிகளும், சென்னையில் உள்ள 17லட்ச வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னதாக பாசன பயன்பாட்டிற்கு உதவிய ஏரிகள் கண்டறியப்பட்டு, அவற்றை தூர்வாரி குடிநீர் ஆதாரமாக மாற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல்வர்
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று கூறினார். சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதே 150 எம்.எல்.டி.கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை முதல்வர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் துவக்கி வைக்கவுள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், 400 எம்.எல்.டி.திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்க 736 நலவாழ்வு மையங்கள் அமைக்கவும், சென்னையில் 372 இடங்களில் இருக்கை வசதி கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.