திருநங்கைகள் நடத்தும் 'டிரான்ஸ் கிச்சன்' உணவகம்-சென்னையில் துவக்கம்
திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் வழக்கம் மாறிவருகிறது. சிலருக்கு நல்ல தொழில், வேலை அமைந்துள்ளது. அந்த வகையில் திருமண மண்டபங்களுக்கு சமையல் வேலைக்கு சென்று கொண்டிருந்த திருநங்கைகள், கொரோனா காலகட்டத்தில் வேலையின்றி தவித்துள்ளனர். இந்நிலையில் கோவையில் உள்ள தன்னார்வலர்கள் உதவியோடு 2020ம் ஆண்டு ஒரு உணவகத்தையே துவங்கி வெற்றிகரமாக தற்போதுவரை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் திருநங்கைகளால் துவங்கப்பட்ட முதல் உணவகம் என்றால் அது கோவையில் ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலையில் உள்ள 'டிரான்ஸ் கிச்சன்' என்னும் உணவகம் தான். கோவையில் துவங்கப்பட்ட உணவகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, இவர்கள் தங்கள் இன்னொரு கிளையை மதுரையில் துவங்கினர். கோரிப்பாளையம் பகுதியில் துவங்கப்பட்டு அதே 'டிரான்ஸ் கிச்சன்' என்னும் பெயரில் இயங்கி வருகிறது.
சென்னையில் துவங்கப்பட்ட முதல் திருநங்கைகள் உணவகம் 'டிரான்ஸ் கிச்சன்'
இந்த உணவகத்தை 10ஆண்டுகளுக்கு மேல் வீட்டிலேயே சமைத்து சிறு சிறு நிகழ்வுகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா என்பவர் நடத்தி வருகிறார். 2021ம்ஆண்டு துவங்கப்பட்ட இவர்களது உணவகங்களில் உணவு சமைத்தல், பரிமாறுதல் என அனைத்து பணிகளையும் திருநங்கைகளே ஈடுபடுத்தப்பட்டு செய்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து பேசிய ஜெயசித்ரா, மக்கள் எங்களுக்கு கொடுக்கும் ஆதரவு மூலம் அடுத்தடுத்த உணவகங்கள் திறக்கப்படும் என்றும், அதன் மூலம் திருநங்கைகளின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் என்றும் கூறினார். அதன்படி, தற்போது 'டிரான்ஸ் கிச்சன்'உணவகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. சஞ்சனா என்னும் திருநங்கை தலைமையில் இந்த உணவகம் துவங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் நேற்று துவங்கப்பட்டுள்ள இந்த உணவகம் திருநங்கைகளால் சென்னையில் துவங்கப்பட்ட முதல் உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.