மகாராஷ்டிர விரைவு சாலையில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து: 17 தொழிலாளர்கள் பலி
மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கர்டர் லாஞ்சர் இயந்திரம் சரிந்து விழுந்ததால் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது. தானேவில் உள்ள சர்லாம்பே கிராமத்திற்கு அருகே பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களை தவிர மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்டர் இயந்திரத்தை இணைக்கும் கிரேன் மற்றும் ஸ்லாப் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்து இந்த பெரும் விபத்தை ஏற்படுத்தியது.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினர், NDRF வீரர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலை மற்றும் அதிவேக ரயில் பாலம் கட்டும் பணிகளில் ப்ரீகாஸ்ட் பாக்ஸ் கர்டர்களை நிறுவ 'கர்டர் லாஞ்சர் இயந்திரம்' பயன்படுத்தப்படுகிறது. 'இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க்' என்றும் அழைக்கப்படும் சம்ருத்தி நெடுஞ்சாலை, மும்பை மற்றும் நாக்பூரை இணைக்கும் 701-கிமீ நீளமுள்ள விரைவுச்சாலையாகும்.