ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
சமீபத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி-தலைமன்னார் பகுதியில் இவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கையில் அங்குவந்த இலங்கை கடற்படை இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறியதோடு, 15 ராமேஸ்வர மீனவர்களையும் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களது 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைதான 27 ராமேஸ்வர மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மேலும் 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது என்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.