ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு
ஆந்திரா முன்னாள்-முதல்வரும், தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019வரை முதல்வர் பதவி வகித்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருக்கும் பொழுது திறன் மேம்பாட்டுத்துறையில் ஊழல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. ரூ.550கோடி வரை அவர் ஊழல் செய்துள்ளார் என்றும் அந்த புகார்களில் கூறப்படுகிறது. இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஆளும்கட்சிக்கு எதிராக அவர் பேருந்தில் ஊர்ஊராக சென்று மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் நந்தியாலா மாவட்டத்தில் ஓர் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அவரை சிஐடி போலீசார் அதிரடியாக அவரது வீட்டில் வைத்து நேற்று கைது செய்தனர்.
கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல்
பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் இந்த ஊழல் விவகாரம் குறித்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று(செப்.,10) காலை அவர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாநில குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள காவல்துறை, நெல்லூர் மாவட்டம் முழுவதும் மற்றும் கோதாவரி மாவட்ட ராஜமுந்திரி பகுதிகளிலும் 144 தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.