ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து: இரவோடு இரவாக 14 பேர் மீட்பு
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர். இடிந்து விழுந்த லிப்டில் இருந்து முதலில் 3 பேரும், அதன் பிறகு மீதமுள்ள 11 பேரும் வெளியே கொண்டு வரப்பட்டனர். கோலிஹான் சுரங்கத்தில் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த பணியாளர்களை இரவோடு இரவாக மீட்புப் பணிகள் மூலம் மீட்டனர். மீட்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த 3 பேர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது
"சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்று ஜுன்ஜுனு அரசு மருத்துவமனையின் டாக்டர் பிரவின் ஷர்மா கூறியுள்ளார். "சிலருக்கு கை, சிலருக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அனைவரும் பத்திரமாக உள்ளனர். 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர், மீதமுள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். " என்று ஜுன்ஜுனு அரசு மருத்துவமனை செவிலியர் ஷிஷ்ராம் கூறியுள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் விஜிலென்ஸ் குழு ஆய்வு நடத்துவதற்காக தண்டவாளத்தில் இறங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.