
மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
செய்தி முன்னோட்டம்
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் ஜே.பீ.பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, 2013 முதல் தற்போது வரை வழக்குகள் பதிவது 600% உயர்ந்துள்ளது.
இதில் பெரும்பான்மை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரானது என்று கூறி அதற்கான தரவுகளையும் தாக்கல் செய்தார்.
இதன்மூலம் எதிர்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கி, வழக்குகளின் பின்னால் அலைய வைக்கிறது.
இதனால் எதிர்கட்சிகளின் ஜனநாயக செயல்பாடுகள் முடக்கப்படுகிறது என்று கூறி வாதிட்டார்.
உத்தரவு பிறப்பிப்பு
பொதுமக்களுக்கு உள்ள அதே சட்ட உரிமைகள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் உள்ளது
மேலும் அவர் 95% வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தான் பதிவாகியுள்ளது என்றும் வாதிட்டார்.
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களுக்கு உள்ள அதே சட்ட உரிமைகள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் உள்ளன. தனிப்பட்ட முறையிலோ, குழுக்களாகவோ குறிப்பிட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயாராக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுவான உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வழக்கை விசாரிப்பது இயலாது என்றும் கூறினர்.
அதன்படி தற்போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.