ஜெயித்தால் சரி, தோற்றால் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய 124 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள்
செய்தி முன்னோட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டையும், வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்புப் பணிகளையும் ஆதரித்து 124 ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் பிற உயர் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இந்திய மக்களுக்குத் திறந்தமடல் ஒன்றை எழுதியுள்ளனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு
தோற்றால் முறைகேடு என்று கூறுவது சரியல்ல
ஓய்வுபெற்ற அதிகாரிகள் தங்களது கடிதத்தில், "தேர்தல் அமைப்பில் கேள்வி எழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை.
ஆனால், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அதை சுமத்துபவரின் கடமையாகும். நீங்கள் வெற்றி பெறும்போது நேர்மையாகவும், தோற்கும்போது முறைகேடாகவும் ஒரு கட்டமைப்பு மாறிவிட முடியாது." என காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆளுங்கட்சியும் கூட பல மாநிலத் தேர்தல்களிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்ததை சுட்டிக்காட்டித் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையை அவர்கள் பலமாக நியாயப்படுத்தியுள்ளனர்.
முக்கியத்துவம்
SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் முக்கியத்துவம்
வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் SIR நடவடிக்கையை ஆதரித்துப் பேசிய அதிகாரிகள், "திருத்தப்படாத வாக்காளர் பட்டியல் வாக்காளரைப் பாதுகாக்காது.
மாறாக மோசடி செய்பவருக்கே பாதுகாப்பாக அமையும்." எனத் தெரிவித்தனர்.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணியின் மூலம் சுமார் 22 லட்சம் இறந்த வாக்காளர்கள் மற்றும் 7 லட்சம் இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டு, 21.5 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள் தேர்தலின் நம்பகத்தன்மையை உயர்த்துவதோடு போலி வாக்காளர்களை முற்றிலுமாகத் தடுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கண்காணிப்பு
நம்பகமான பாதுகாப்புகளும் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பும்
இன்றைய தேர்தல் முறை வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை முறை (VVPAT), வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பான சீல் வைப்பு மற்றும் பூத் நிலை முகவர்களின் கண்காணிப்பு என பல அடுக்கு பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றமும் இந்த சிறப்புத் திருத்தப் பணிகளை தீவிரமாக ஆய்வு செய்து கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
எனவே, தேர்தல் அமைப்பின் வெளிப்படைத்தன்மையை சந்தேகிக்காமல், முறையான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே கருத்துகளை முன்வைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.