இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது; விண்ணப்பிப்பது எப்படி?
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் மொத்தமாக 11,558 காலியிடங்கள் உள்ளன. இளங்கலை மற்றும் பட்டதாரி நிலை பதவிகளுக்கான இந்த வேலைவாய்ப்பின் விரிவான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ ஆர்ஆர்பி மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு கட்டுப்பாட்டு வாரியத்தின் (ஆர்ஆர்சிபி) இணையதளங்களில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஆர்ஆர்பி என்டிபிசி 2024க்கான விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 14இல் பட்டதாரி நிலை பதவிகளுக்குத் தொடங்கி அக்டோபர் 13இல் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளங்கலை நிலை பதவிகளுக்கு, விண்ணப்ப சாளரம் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை திறந்திருக்கும். விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ரயில்வே ஆட்சேர்ப்பு காலியிடங்கள்
மொத்தமுள்ள 11,558 காலியிடங்களில், 8,113 பட்டதாரி நிலைப் பணிகளுக்கும், 3,445 இளங்கலை நிலைப் பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரி நிலை பதவிகளுக்கு, காலியிடங்கள் பின்வருமாறு: தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர்: 1,736 காலியிடங்கள் ஸ்டேஷன் மாஸ்டர்: 994 காலியிடங்கள் சரக்கு ரயில் மேலாளர்: 3,144 காலியிடங்கள் ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட்: 1,507 காலியிடங்கள் சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட்: 732 காலியிடங்கள் இளங்கலை நிலைப் பணிகளுக்கான காலியிடங்கள் பின்வருமாறு:- கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க்: 2,022 காலியிடங்கள் கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர்: 361 காலியிடங்கள் ஜூனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர்: 990 காலியிடங்கள் ரயில் கிளார்க்: 72 காலியிடங்கள்
ஆர்ஆர்பி தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தின் ஒரு பகுதி, வங்கிக் கட்டணங்களைக் கழித்த பிறகு, கணினி அடிப்படையிலான தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்குத் திருப்பித் தரப்படும். விண்ணப்பத்திற்கான தகுதி அளவுகோல்கள், வயது வரம்புகள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வ ஆர்ஆர்பி இணையதளங்களில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தகவல்களை பெற விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து ஆர்ஆர்பி தளத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.