நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ
RBI, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி அலுவலகங்கள் தாக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு(RBI) இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பதவி விலக வேண்டும் என அந்த மிரட்டல் கடிதம் அனுப்பியவர் வலியுறுத்தியுள்ளார். நாளை மதியம் 1:30 மணிக்கு மும்பையில் 11 இடங்களில் மொத்தம் 11 வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படும் என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பின்னால் இருப்பது யார்?
மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்திய பிறகும் எதுவும் கிடைக்கவில்லை என மும்பை போலீசார் தெரிவித்தனர். 'கிலாபத் இந்தியா' என்ற மின்னஞ்சல் பயனரிடம் இருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அது தவிர அனுப்பிய நபர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியவில்லை. நிர்மலா சீதாராமன் மற்றும் சக்திகாந்த தாஸ் ஆகியோர் "இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலில்" ஈடுபட்டதாக மின்னஞ்சல் அனுப்பியவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மிரட்டல் தொடர்பாக மும்பையில் உள்ள எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் மும்பையின் வெவ்வேறு இடங்களில் ''11'' வெடிகுண்டுகளை வைத்துள்ளோம். தனியார் துறை வங்கிகளுடன் இணைந்து ரிசர்வ் வங்கி இந்திய வரலாற்றில் மிகப் பெரிய ஊழலைச் செய்துள்ளது. இந்த மோசடியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் "சக்திகாந்த தாஸ்", நிதி அமைச்சர் "நிர்மலா சீதாராமன்", சில உயர் வங்கி அதிகாரிகள் மற்றும் சில புகழ்பெற்ற இந்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு பங்கு உள்ளது. எங்களிடம் அதற்கான போதுமான உறுதியான சான்றுகள் உள்ளன 3 குண்டுகளின்வைக்கப்பட்டிருக்கும் இடம்: 1] RBI - புதிய மத்திய அலுவலகக் கட்டிடம் - கோட்டை - மும்பை 2] HDFC ஹவுஸ் - சர்ச்கேட் - மும்பை 3] ஐசிஐசிஐ வங்கி கோபுரங்கள் - பிகேசி - மும்பை
மேலும் அந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் இருக்கும் செய்திகள்:
இந்த '3 குண்டுகளும் சரியாக நாளை மதியம் 1:30 மணிக்கு வெடிக்கும். ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சர் இருவரும் தங்கள் பதவிகளில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் . இந்த ஊழல் பற்றிய முழு விவரகங்களையும் அவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அவர்கள் இருவருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுதியான தண்டனையை வழங்குமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கோருகிறோம். நாளை மதியம் 1:30 மணிக்கு முன் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அனைத்து 11 குண்டுகளும் ஒவ்வொன்றாக வெடிக்கும்.