
தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பரவலை தவிர்க்கவும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று(அக்.,25)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர், மழைக்காலங்களில் தான் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசு அதிகமாக உற்பத்தியாகும்.
இதனால் டெங்கு, மலேரியா, டைபாய்டு, தொண்டை வலி, சளி, காலரா உள்ளிட்ட நோய் தொற்றுகளும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் தான் உள்ளது.
இந்தாண்டு டெங்குவால் 5,600 பேர் பாதிப்படைந்த நிலையில் 492 சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்தார்.
முகாம்
தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக 10 வாரங்களில் 10,000 மருத்துவ முகாம்கள்
வரும் அடுத்த 2 மாதங்களில் இதன் பாதிப்பு மேலும் 2,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து டெங்கு மட்டுமின்றி மலேரியா, காலரா போன்ற நோய் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, வரும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கி அடுத்த 2 மாதங்களின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கிட்டத்தட்ட 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
சளி, காய்ச்சல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் உள்ளோர் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொண்டு மருத்துவர்களை அணுகி இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
10 வாரங்களில் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது என்பது தமிழ்நாடு மாநிலத்தில் இதுவே முதன்முறையாகும்.