திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேறியது. இதனை காண அங்கு குவிந்த மக்கள் கூட்டத்தினை இது வெகுவாக கவர்ந்தது. தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தான் இந்த பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நடந்தது. வள்ளி கும்மியாட்டம் என்பது தமிழ் கடவுளான முருகனை நாடோடி இனத்தில் பிறந்த வள்ளி விநாயகர் துணையுடன் திருமணம் செய்த நிகழ்வுகளை கலைஞர்கள் இந்த கும்மியாட்டம் மூலம் பாரம்பரிய முறையில் விளக்குவதே ஆகும். முந்தைய காலங்களில், கோயில் திருவிழாக்களில் வள்ளி கும்மியாட்டம் விடிய விடிய நடக்கும். ஆனால் காலப்போக்கில் இந்த கலை அழிய துவங்கியுள்ளது.
உதவித்தொகையினை வழங்கி பாரம்பரிய கலைகளை காப்பாற்றவேண்டும்
அழிந்து வரும் இந்த கும்மியாட்டத்தினை தமிழக அரசு மீண்டும் உயிர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், அரசு விழாக்களில் கும்மியாட்டத்தினை நடத்திட முன்வரவேண்டும் என்று கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த கலையினை மீட்டெடுக்கவேண்டும் என்னும் முயற்சியில் கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு சில ஆசிரியர்கள் இந்த கலையினை இலவசமாகவே இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்கிறார்கள். கேரளாவில் செண்டை மேள கலையினை காப்பாற்ற அம்மாநில அரசு அதனை கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு உதவி தொகையினை வழங்கி வருகிறது. அதே போல் தமிழக அரசும் முன்வந்து இதுபோன்று உதவித்தொகையினை வழங்கி பாரம்பரிய கலைகளை காப்பாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.