இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம்
மேடை நாடகம் மற்றும் நுண்கலைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், 1961-ஆம் ஆண்டு சர்வதேச நாடக நிறுவனத்தால் (ITI), சர்வதேச நாடக தினம் கொண்டாடப்பட ஆரம்பித்தது. அன்று முதல், ஆண்டுதோறும், மார்ச் 27 அன்று இந்த சர்வதேச நாடக தினம் கொண்டாடப்படுகிறது. நாடகத்துறையையும், நாடக கலைஞர்களின் ஆற்றலை எடுத்துரைக்கும் வகையில், 'உலக தியேட்டர் தினம்', ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது. மேடை நாடகங்கள், பல காலங்களாக, சமுக கருத்துகளை பரப்பும் ஒரு ஊடகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உலகம் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும், சமூக அநீதிகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாட்டின் கலாச்சார மகத்துவத்தையும், வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் கதைகளை கூறவும், இந்த நாடகத்துறை பயன்படுத்தப்பட்டது.
மேடை நாடகத்தின் முக்கியத்துவம்
மேடைகலைஞர்கள், பார்வையாளர்களுக்கு, வசீகரமூட்டும் சைகைகள், பேச்சு, பாடல், இசை அல்லது நடனம் மூலம் நேரடியாக தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்வார்கள். இன்றளவும், வெள்ளித்திரைக்கு வருவதற்கு முதல் படியாக தெருக்கூத்தும், மேடை நாடகங்களும் ஒரு பயிற்சி பட்டறையாக பார்க்கப்படுகிறது. நாடகத்தின் தாயகமாக கருதப்படும், பாரிஸில் 'தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்' எனப்படும் சீசனின் தொடக்கத்தை அனுசரிக்கும் விதமாக, ஐடிஐ நிறுவனமும், சர்வதேச நாடக சமூகமும் இந்நாளை கொண்டாடுகிறது. இந்த நாளின் போது, நாடகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த வருடாந்திர செய்தியை வழங்குவதற்காக, ஒரு பிரபல நாடகக் கலைஞரை, ITI தேர்வு செய்யும். இந்த ஆண்டு, எகிப்தை சேர்ந்த சமிஹா அயூப் என்பவர், வருடாந்திர செய்தியை வழங்குகிறார்.