மஞ்சும்மேல் பாய்ஸ் இசை காப்புரிமை வழக்கு: இளையராஜா கேட்டது எவ்வளவு? வழங்கப்பட்டது எவ்வளவு?
மலையாள சூப்பர்ஹிட் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், 'கண்மணி அன்போடு' பாடலைப் பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு 60 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இளையராஜா அந்தப் பாடலைப் பயன்படுத்த முன் அனுமதி கேட்கவில்லை எனக் கூறி வழக்குப் பதிவு செய்தார். 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் சௌபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோர், இப்படத்தில் 'குணா'வில் இருந்து 'கண்மணி அன்போடு' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கியதாக கூறப்படுகிறது. மஞ்சும்மேல் பாய்ஸ் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, இளையராஜா 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன நடந்தது?
மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தின் க்ளைமாக்ஸில் 'கண்மணி அன்போடு' பாடலை வைத்தார். குணா படத்தின் குகையில் இது படமாக்கப்பட்டதால் அடையாளமாக இந்த பாடல் ஒலிக்கவே, இது அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது. எனினும், படம் வெளியாகி சில மாதங்களில், இளையராஜா மற்றும் அவரது குழுவினர் காப்புரிமை மீறலுக்காக 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பினர். இது குறித்து அனுமதியைப் பெறவில்லை, அதாவது, பாடல் பயன்படுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெறவில்லை என்று இளையராஜா கூறினார். அந்த நோட்டீசில், இளையராஜாவின் இசைப்படைப்புகளின் முழு உரிமையும் இளையராஜாவுக்கு உண்டு என அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தில், இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்தாலும், அதை 'வேலைச் சுரண்டல்' என்று இளையராஜா தரப்பு குறிப்பிட்டது.
இளையராஜாவும் காப்புரிமை பஞ்சாயத்துகளும்
இளையராஜா, பிரபல பாடகர் SPB மீது காப்புரிமை போராட்டத்தை எடுத்தபோது தான் இந்த சர்ச்சை முதன்முதலில் துவங்கியது. மேடையில் இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை வழங்க வேண்டும் என, குறிப்பாக SPBக்கு அவர் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின்னர், '96 படத்தில் வெளியான 'யமுனை ஆற்றிலே' பாடல், 'தளபதி' படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் என பலருக்கும் நோட்டீஸ் பறந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு 'மஞ்சுமேல் பாய்ஸ்' மற்றும் 'விக்ரம்' படத்தில் இளையராஜாவின் பாடல் முன் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும், இழப்பீடு வேண்டுமெனவும் வழக்கு தொடுக்கப்பட்டது. இது மக்களிடத்தில் அவர் மேல் இருக்கும் மரியாதையை குறைத்து வருகிறது என்றே கூறலாம்.