பிக் பாஸ் தமிழிலிருந்து கமலின் விலகலுக்கு பின்னர் விஜய் டிவி வெளியிட்ட அறிக்கை
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தான் தொகுத்து வழங்க போவதில்லை என கமல்ஹாசன் இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர் திரைப்பட பணிகள் காரணமாக தான் விலகுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய் டிவி சார்பாக பதில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,"அதில் 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி, நீங்கள் ஆடியன்ஸோடு மட்டுமல்லாமல், போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடம் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள்" "அதனால் தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பதாக நீங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது." எனத்தெரிவித்துள்ளது.
அடுத்த தொகுப்பாளர் யார் என்பது குறித்த தகவலில்லை
மேலும் அந்த அறிக்கையில், "இருந்தாலும் உங்களின் காரணங்களை மதிக்கிறோம், உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். நீங்கள் இல்லா பிக்பாஸை மிஸ் பண்ணுவோம், ஆனால் ஒரு தொகுப்பாளராக நீங்கள் விட்டுச்சென்ற லெகஸி என்றென்றும் எங்களை ஊக்குவிக்கும். உங்களின் சினிமா கெரியருக்கு வாழ்த்துக்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கமலுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்பது சஸ்பென்சாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன், சிம்பு, சூர்யா அல்லது அரவிந்த் சுவாமி போன்ற விஜய் டிவியில் ஏற்கனவே முத்திரை படைத்தவர்கள் வருவார்களா அல்லது புதிய நபரை களமிறக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு துவங்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.