விஜய்யின் 'ஜன நாயகன்' பட விநியோக உரிமை ரூ. 105 கோடிக்கு விற்பனை
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை, ரூ. 105 கோடி என்ற பிரம்மாண்டமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமத்துக்காக கிடைத்த சாதனை உச்சபட்ச விலையாகும். 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, தமிழ்நாடு உரிமம் மட்டும் ரூ. 100 கோடியைக் கடந்து, தமிழ் விநியோகச் சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த வரலாறு காணாத தொகை, நடிகர் விஜய்யின் நிலையான சந்தை மதிப்பு மற்றும் ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் தொடர்ச்சியான கவர்ச்சியைக் காட்டுகிறது.
உத்தி
விநியோகத்தில் புதிய யுத்தி
'ஜன நாயகன்' திரைப்படத்தின் விநியோகத்திற்காக, படக்குழுவினர் ஒரு புதிய உத்தியை கையாண்டுள்ளனர். முந்தைய படங்களை போல ஒரே ஒரு விநியோகஸ்தரிடம் கொடுக்காமல், தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய ஐந்து முக்கிய விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளனர். சேலம், திருச்சி மற்றும் மதுரை பகுதிகளின் உரிமைகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் நாராயணசாமி ஆகியோர் பெற்றுள்ளனர். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உரிமத்தை பிரதாப் பெற்றுள்ளார். வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு உரிமங்களை S பிக்சர்ஸ் சீனு பெற்றுள்ளார். கோயம்புத்தூர் பகுதியை மன்னார் கையாளுவார். சென்னை நகரம் மற்றும் செங்கல்பட்டு உரிமைகளை AGS மாலி பெற்றுள்ளார். இந்த ஆறு பகுதிகளின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் ரூ. 70 கோடி என்று அறியப்படுகிறது.
விவரங்கள்
ஜனநாயகன் படத்தின் விவரங்கள்
'ஜன நாயகன்' திரைப்படம், நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நடிக்கும் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படம், அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி, 2026 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இந்தப் படம் சுமார் ரூ. 400 கோடி வசூலைக் குவிக்கும் என வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறுகிறது.