எதிர்பார்த்த அளவு இல்லை; வேட்டையன் படத்தின் இரண்டு நாள் கலெக்சன் இவ்ளோதானா?
ரஜினிகாந்தின் நடிப்பில் வியாழக்கிழமை (அக்டோபர் 10) வெளியான வேட்டையன் திரைப்படம் அதன் தொடக்க நாளில் பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளிலும், படம் வசூலில் அதன் வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் உள்நாட்டில் அதன் தொடக்க நாளில் ரூ. 31.7 கோடியை வசூலித்தது. மேலும் இரண்டாவது நாளில் ரூ.23.8 கோடியை வசூலித்தது. இதன் மூலம் உள்நாட்டில் மொத்தமாக இரண்டு நாட்களிலும் சேர்த்து ரூ.55.5 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபிஸில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வேட்டையன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உண்மையில், இரண்டு நாட்களின் மொத்த வசூலில், தமிழகத்தில் இருந்து மட்டும் ரூ 49.1 கோடி வசூலித்துள்ளது.
வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என நம்பிக்கை
வார இறுதியில் விடுமுறையை முன்னிட்டு படத்தின் மொத்த மொத்த வசூல் ரூ.70 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் அதன் இரண்டாவது நாளில், வேட்டையன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த தமிழ் பார்வையாளர்கள் எண்ணிக்கை 58.53 சதவீதமாக இருந்தது. சென்னையில் 1042 காட்சிகள் 72.50 சதவீதமும், பெங்களூரில் 455 காட்சிகளுக்கு 44.50 சதவீதமும் டிக்கெட் விற்கப்பட்டது. இதற்கிடையே, 2024 ஆம் ஆண்டில், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் வெற்றிப்படமாக விஜய் நடித்த தி கோட் உள்ளது. முதல் இரண்டு நாட்களில் தி கோட் 70 கோடியை வசூலித்தது. இதற்கிடையே, ரஜினிகாந்தின் கடைசி படமான ஜெயிலர் அளவுக்கு வசூலை இந்த படத்தால் ஈட்ட முடியாது என கணிக்கப்பட்டுள்ளது.