சின்மயி இப்போ வந்து புகார் அளிப்பது ஏன்? வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி
கோலிவுட்டின் புகழ்பெற்ற பின்னணி பாடகிகளில் ஒருவர் சின்மயி. சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம் . அவர் புகாரளித்த பிறகு தமிழ்நாட்டில் 'மீடூ' விவகாரம் அதிகமாக பேசப்பட்டது. இந்த புகாருக்கு பின்னரே, தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படையாக பேச தொடங்கினர். ஆனால் பாடகி சின்மயிக்கு, அதன்பிறகு தமிழ் சினிமாவில், பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பீத்தில் ட்விட்டரில் தமிழக முதல்வருக்கு ட்வீட் செய்து, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் சின்மயி. பல பெண்கள் புகாரளித்தும், இன்னும் வைரமுத்து மேல் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி கேட்டிருந்தார்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவின் பேட்டி
இந்நிலையில், பழம்பெரும் நடிகை 'வெண்ணிற ஆடை' நிர்மலா இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். "மீடூ மாதிரி பிரச்சனைகள் அந்த காலகட்டத்தில் கிடையவே கிடையாது. மீடூ ஒரு கன்றாவியான விஷயம். மீடூ-னு இன்னைக்கு சொல்றவங்க அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க" என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. "இவங்களுக்கு ஏதோ வேலை நடக்கனும் அப்படிங்கிறதுக்காக என்னமோ பண்ணிட்டு, இப்போ வந்துட்டு மீடூ, மீடூனு ஏன் ஆரம்பிக்கிறாங்க. அப்போ எதுக்கு பேசாம இருந்தாங்க. இவ்ளோ நாள் எதுக்கு வாயை மூடிட்டு இருந்தாங்க. அவரு ஒரு நல்ல அந்தஸ்துல வந்ததுக்கு அப்புறம் அவரைப் பற்றி சொல்லி அவர் மேல கலங்கம் ஏற்படுத்துவதற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களா" என்று மேலும் இது குறித்து பேசியுள்ளார், 'வெண்ணிற ஆடை' நிர்மலா.