64 வருடங்களாக தமிழ் திரை உலகை கலக்கும் 'உலக நாயகன்' கமல்ஹாசன்
தமிழ் திரை உலகில் நடிகர் கமல் ஹாசன் அறிமுகமாகி இன்றோடு 64 வருடங்கள் நிறைவடைகிறது. நடிகர் கமல் ஹாசனின் இந்த மாபெரும் மைல்கல்லை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமல் ஹாசன் அறிமுகமானார். அதன் பிறகு, நடிப்பு, சங்கீதம், ஆடல், பாடல் போன்ற பல துறைகளிலும் கொடிகட்டி பறந்த கமல் ஹாசன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது போன்ற பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
'எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக': கமல் ஹாசன்
அவரது 64 வருட திரை பயணத்தின் மைல்கல்லை குறிக்கும் இந்நாளில், அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், "6 தசாப்தங்களாக இணையற்ற பேரரசராக சினிமா உலகை ஆண்டு கொண்டிருக்கும் உலக நாயகன் தற்போது தனது 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்." என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து, அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக." என்று தெரிவித்துள்ளார்.