Page Loader
நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு

நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு

எழுதியவர் Srinath r
Jan 04, 2024
12:08 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு ஜனவரி 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி, நிமோனியா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது உடல் அரசு மரியாதையுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நடிகர் கார்த்தி, அவரது நினைவிடத்தில் தனது தந்தை சிவகுமார் உடன் வந்து சூடமேற்றி, மலர் வளையம் வைத்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

2nd card

"விஜயகாந்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை"

அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி, விஜயகாந்த் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். "விஜயகாந்த் உடன் எனக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நான் அவரை சென்று சந்தித்தேன். நடிகர் சங்கம் சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம். தலைவன் என்றால் எப்படி முன்னின்று வேலைகளை செய்ய வேண்டும் என்று அவரை பார்த்து கற்றுக்கொண்டோம்" என தெரிவித்தார். வரும் 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கில் அவருக்காக இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது என, நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி அறிவித்தார்.

3rd card

விஜயகாந்தின் குடும்பத்திற்கு கார்த்தி இரங்கல்

அந்த இரங்கல் கூட்டத்தில், விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் செய்ய வேண்டியவை மற்றும் அரசிடம் அவருக்காக முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் வெளியிடப்படும் எனவும் கார்த்தி தெரிவித்தார். விஜயகாந்தின் அன்பு தமிழ்நாடு முழுவதும் எப்போதும் பரவ வேண்டும் என தெரிவித்த கார்த்தி, அவரின் குடும்பத்திற்காகவும், அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்காக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். விஜயகாந்த் உயிரிழந்த போது நடிகர் கார்த்தி வெளிநாட்டில் இருந்ததால், இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.