LOADING...
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 100இல் இடம் பிடித்த பிரபல டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்
பிரபல இந்திய டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 100இல் இடம் பிடித்த பிரபல டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2025
11:18 am

செய்தி முன்னோட்டம்

துபாயிலிருந்து செயல்படும் பிரபல இந்திய பயண யூடியூபரும், புகைப்படக் கலைஞருமான அனுனய் சூட் தனது 32வது வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் இந்தச் செய்தி உறுதியாகியுள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் இறப்பதற்குச் சற்று முன்பு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருந்ததாக அவரது சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. "எங்கள் அன்பு மகன் அனுனய் சூட் மறைந்த செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கிறோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று அவரது குடும்பத்தினர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

அனுனய் சூட்

யார் இந்த அனுனய் சூட்?

அனுனய் சூட் ஒரு பிரபலமான பயண இன்ஃபுளூயன்சர் (Travel Influencer). இவர் பல்வேறு சமூக ஊடக தளங்களில் தனது பயணக் காட்சிகளுக்காக மிகவும் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் 14 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களையும், யூடியூபில் 3.8 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டிருந்தார். இதுவரை 195 நாடுகளில் 46 நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அவரது பயண உள்ளடக்கங்கள் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் முதல் 100 டிஜிட்டல் நட்சத்திரங்கள் பட்டியலில் இடம்பெற உதவின. ஸ்விட்சர்லாந்து சுற்றுலா, சவுதி அரேபிய சுற்றுலா வாரியம், நியூசிலாந்து சுற்றுலா வாரியம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற நிறுவனங்களுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.