நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் போக திட்டம்; அரசியல் ஆட்டம் ஆரம்பம்?
நடிகர் விஜய் சமீபகாலமாகவே தனது பட விழாவாகட்டும், பொது நிகழ்ச்சியாகட்டும், லைட்டாக அரசியல் கலந்து பேசி வருகிறார். அவர் அரசியலில் நுழைய ஆழம் பார்க்கிறார் என பேச்சு வர அதுவே காரணம். அதற்கு தகுந்தாற்போல, இந்தாண்டு பள்ளி பொதுத்தேர்வில், முதல் 3 இடங்களை பிடித்த மாணாக்கர்களை சந்தித்து, ஊக்கத்தொகையும் அளித்தார். அந்த விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போதும் அரசியல் பேசினார் விஜய். அந்நிகழ்ச்சியில் தேர்தல்-வாக்குகள் குறித்து விஜய் பேசியது பெரும் பேசுப்பொருளாக மாறியது. இதனையடுத்து, அவர் விரைவில் அரசியலில் நுழைவார் என்றும், வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு, தேர்தலை சந்திப்பார் என்றெல்லாம் பேச்சு உலவியது.
பாதயாத்திரை மூலமாக மக்களை நேரில் சந்திக்க திட்டம்
இதனிடையே, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேற்று சென்னைக்கு வரவைத்து, நேரில் சந்தித்துள்ளார், விஜய். கூட்டத்தின் இறுதியில், ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த ஒரு சில நிர்வாகிகள், மாணவர்களை ஒன்று திரட்டி சென்னையில் விழா எடுத்ததற்கு நன்றி கூறத்தான் இந்த கூட்டம் எனக்கூறினாலும், வேறு சில தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்று, 'லியோ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒட்டி, நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளாராம். மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் எண்ணஓட்டத்தை அறிந்துகொண்டு, பின்னர் தனது அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமாம். இது மட்டுமின்றி, அரசியலில் நுழைந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் எனவும் விஜய் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.