இந்த வருட தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு நடுவர்கள் இவர்களா?
ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான 'மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியை தழுவி, ஹிந்தியில் 'மாஸ்டர் செஃப் இந்தியா' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. கடந்த 2010 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், செஃப் குணால் கபூர் மற்றும் செஃப் அஜய் சோப்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரை முக்கியமான சமையல் விளையாட்டு நிகழ்ச்சியாக வலம் வரும் இந்நிகழ்ச்சியை, 2021 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்தனர்.
தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு புதிய நடுவர்கள்
'மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்நிகழ்ச்சிக்கு புதிய நடுவர்களை அறிவித்துள்ளனர். தமிழ் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் கௌஷிக் சங்கர், செஃப் ஸ்ரேயா அட்கா மற்றும் செஃப் ராகேஷ் ரகுநாதன் ஆகியோரும், தெலுங்கு நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் சஞ்சய் தும்மா, செஃப் நிகிதா உமேஷ் மற்றும் செஃப் சலபதி ராவ் ஆகியோரும் இருப்பர். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பான முதல் சீசனில், நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.