LOADING...
சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம்! கொதித்தெழுந்த டி. ராஜேந்தர்
அரசன் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் TR

சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம்! கொதித்தெழுந்த டி. ராஜேந்தர்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2026
05:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் மூத்த கலைஞரும், இயக்குனருமான டி. ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், சிலம்பரசன் ஏற்கனவே ஒப்பந்தமான முந்தைய படங்களின் நிலுவையில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடரக் கூடாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது மகனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ள டி. ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தின் தன்னிச்சையான போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

படப்பிடிப்பு

'அரசன்' படப்பிடிப்பு முடக்கம்: டி.ஆர். எழுப்பும் அறச்சீற்றம்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் வட சென்னை பின்னணியில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அமீர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில், தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் (FEFSI) இணைந்து பணிகளை நிறுத்தியுள்ளன. இது குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள டி. ராஜேந்தர், "தான் ஒரு தந்தையாகவோ அல்லது நடிகனுக்காகவோ வாதாட வரவில்லை, மாறாகத் தயாரிப்பாளர் சங்கமும் சம்மேளனமும் அறம் தவறி நடப்பதையே சுட்டிக்காட்ட வந்துள்ளேன்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஐசரி கணேஷ்

நீதிமன்றத் தீர்ப்பும் ஐசரி கணேஷ் விவகாரமும்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக சிலம்பரசனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கைச் சுட்டிக்காட்டிய டி.ஆர், அந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். "வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை சிலம்பரசனையே சேரும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின் நகல் எங்களிடம் உள்ள நிலையில், பழைய பிரச்சனைகளைக் காரணம் காட்டி சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு 'அரசன்' படப்பிடிப்பை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

கோரிக்கை

நடிகர் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை

ஒரு நடிகரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்படும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கண்டித்துள்ள டி. ராஜேந்தர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மௌனம் குறித்தும் அதிருப்தி வெளியிட்டார். "தயாரிப்பாளர் சங்கம் ஒரு தயாரிப்பாளருக்காகத் துணை நிற்கும் போது, நடிகர் சங்கம் ஏன் ஒரு நடிகனுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது?" என்று வினவிய அவர், நடிகர் சங்கம் உடனடியாகத் தலையிட்டுச் சிலம்பரசனுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement