ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி ரசிகனாக நீங்கள் மிஸ் செய்யக்கூடாத படங்கள் இவை
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்த் என்பவர் ஒரு சூப்பர்ஸ்டார் மட்டும் அல்ல. கமெர்ஷியல் வெற்றி படங்களை தரும் வெள்ளிவிழா நாயகன் மட்டுமல்ல. அவர் ஒரு தேர்ந்த நடிகர்.
அவரின் ஆரம்ப கால படங்கள் அனைத்துமே அவருடைய முதிர்ந்த நடிப்பிற்கு எடுத்துக்காட்டு.
எனினும் காலப்போக்கில் அவரே எடுத்த முடிவு தான் ரசிகர்களை மகிழ்விக்க கமெர்ஷியல் படங்களில் நடிக்கலாம் என்பது.
அவரின் 74வது பிறந்தநாள் வரும் டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்த தருணத்தில், 'நடிகன்' ரஜினியின், கட்டாயம் பார்க்க வேண்டிய சிறந்த படங்கள் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.
மல்டி ஹீரோ படங்கள்
மல்டி ஹீரோ படங்களிலும் தன்னுடைய நடிப்பின் மூலம் தனித்து நின்ற ரஜினிகாந்த்
அபூர்வ ராகங்கள்: இவரது அறிமுக படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், படத்தின் திருப்புமுனையாக இருந்தது அவரது கதாபாத்திரம். அவர் விரக்தி மற்றும் திமிராக கேட்-ஐ திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழையும் அந்த ஒரு காட்சி மட்டுமே போதும், அவருடைய ஸ்டைல் மற்றும் நடிப்புத்திறனை பாராட்ட!
மூன்று முடிச்சு: ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி நடித்துள்ள இந்த படத்தில் அழுத்தம் நிறைந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினிகாந்த். இவர்கள் மூவரும் இணைந்து திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கும்.
16 வயதினிலே: பரட்டை என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார் ரஜினி. வில்லன் கதாபத்திரத்தை கூட ரசிகர்கள் விரும்பும்படி நடிக்க ரஜினியால் மட்டுமே முடியும்.
நான்-கமர்ஷியல்
நடிப்பிலும், திரைக்கதையிலும் எதார்த்தத்தை கொண்டு வந்த நான்-கமர்ஷியல் படங்களில் நாயகன்
ஆறிலிருந்து அறுபது வரை: இந்த படம் வெளியாகி இந்தாண்டுடன் 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆறு வயதில் குடும்ப பாரத்தை சுமக்கத் துவங்கி கிட்டதட்ட 60 வயதில் மரணத்தை தழுவும் நபரின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. இன்று வரை ரஜினி படப் பட்டியலில், தனியிடம் பிடித்திருக்கிறது இந்தப் படம்.
முள்ளும் மலரும்: மஹேந்திரன் இயக்கத்தில் உருவான இந்த அழுத்தமான படம், ரஜினியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மகேந்திரன் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கினார் என அப்போதைய தமிழக முதல்வர் MGR பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ரஜினிகாந்தின் யதார்த்தமான நடிப்பைப் பாராட்டினார்.
பக்தி படங்கள்
பக்தி படங்களிலும் தன்னுடைய முத்திரையை பதித்த ரஜினிகாந்த்
ஸ்ரீ ராகவேந்திரர்: நடிகர் ரஜினிகாந்த், ஹிந்து துறவியான ஸ்ரீ ராகவேந்திரராக நடித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், தற்போது வரை அவரது முதிர்ந்த நடிப்பை பாராட்டை பெற்று வருகிறது. அமைதியான முகபாவம், சாந்தமான பார்வை மற்றுமின்றி தூய தமிழில் அவரது வசன உச்சரிப்பும் இப்படத்தின் கூடுதல் பிளஸ்.
பாபா: ரஜினியின் வாழ்க்கையின் தழுவலாக பார்க்கப்பட்ட இப்படம், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியது. மாபெரும் தோல்வி படமாக இருப்பினும், இதில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பை காணலாம்.
இவற்றை தவிர தளபதி, படிக்காதவன், அலெக்ஸ் பாண்டியன், பாட்ஷா, அண்ணாமலை போன்ற கமெர்ஷியல் படங்களிலும் ரஜினி தனது தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார் என்பது மறுப்பதற்கில்லை.