ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை: பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டிய தென்னிந்திய நடிகைகள்
இந்திய சினிமாவில், சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே, தென்னிந்தியாவில் இவர்களின் வெற்றியை பார்த்து, ஹிந்தி படவுலகில் கதவுகள் தானே திறந்தது. அவர்களும், அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு, தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். அந்த வகையில், பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி தொடங்கி தற்போது ஜவானில் நடித்துள்ள லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வரை பலரும் இங்கிருந்து சென்றவர்களே. பாலிவுட் பற்றி அவர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை தெரிந்துகொள்வோம்.
அசின்
நடிகர் அமீர்கானுக்கு ஜோடியாக 'கஜினி' படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் உள்ளிட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரிந்தார் . 2014 ஆம் ஆண்டு, ஹிந்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஹிந்தியில் சூப்பர் ஸ்டார்களுடன் மட்டுமே பணியாற்றுவது தவறான கருத்து என்று கூறியிருந்தார். "இது ஒரு தவறான கருத்து. நான் பிரபலமான நடிகர்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நான் யாருடனும் படங்களில் நடிக்க தயாராகவே இருக்கிறேன். ஆனால், திரைக்கதை நன்றாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
ஜெனிலியா டிசோசா
இவர் ஹிந்தி சினிமா மூலமாக திரைப்படங்களில் நுழைந்தாலும், பின்னர் அவர் நடித்த தென்னிந்தியா படங்கள் மூலமாகவே பிரபலமானார். ஒரு பேட்டியில், "நான் தென்னிந்தியப் படங்களில் நடித்தபோது, பாலிவுட்டில் சோடைபோனவர்கள் தான் தென்னிந்திய சினிமாவிற்கு செல்வார்கள் என பலரும் என் காதுபட கிண்டல் செய்தனர். ஆனால், தெற்கில் உள்ளது மிகவும் விசுவாசமான ரசிகர் பட்டாளம். அவர்கள் நடிகர்களை தங்கள் உறவுகளாக பார்க்கிறார்கள். "
ஸ்ருதி ஹாசன்
பல பாலிவுட் படங்களில் பணிபுரிந்த ஸ்ருதி ஹாசன், "நான் ஹிந்தி படவுலகில் பலமுறை வேற்று நாட்டவரைப் போல உணர்ந்திருக்கிறேன்". "குறிப்பாக பாலிவுட்டில், வடக்கு-தெற்கு பிரிவினை என்ற விஷயம் தொடர்ந்து நடக்கிறது. உதாரணத்துக்கு, நான் மூன்று தெலுங்குப் படங்கள், மூன்று தமிழ்ப் படங்கள் செய்கிறேன் என்றால், 'அடடா, நீ ஹிந்தியில் கவனம் செலுத்தவில்லையே' என்று சொல்வார்கள். மேலும், ஒரு தனி நபராக, ஒரு நடிகை நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளிலிருந்து நான் எப்போதும் தனித்து இருப்பதாக உணர்கிறேன். இந்த வியாபாரத்தின் அந்த தந்திரங்கள் என்னவென்று இன்னும் புரியவில்லை" எனக்கூறினார்
ஸ்ரீதேவி
ஒரு படத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலித்த முதல் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவிதான். 2012 இல்அளித்த பேட்டியில் , "இந்தத் தொழில் காரணமாக, நான் எனது அடையாளத்தைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லோராலும் நடிகையாக முடியாது என்று நான் கருதுகிறேன். இது விளையாட்டு இல்லை. நீங்கள் உண்மையில் அதிகமாக உழைக்க வேண்டும். சிறப்பாக இருக்க, உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். இண்டஸ்ட்ரியில் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே என்பதற்காக படம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை" எனக்கூறினார்.