செம்பி பட விழாவில் சர்ச்சை : படத்தில் மதப்பிரச்சாரமா?
மைனா, கும்கி, கயல் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமன். இவரின் இயக்கத்தில் 'செம்பி' திரைப்படம், திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களை மட்டும் ஏற்று நடித்த இவர் தற்போது இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கோவை சரளாவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஷ்வின்குமாரும் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தம்பி ராமையா மற்றும் சிறுமி நிலா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது.
செம்பி படம் கிறிஸ்துவ மதத்தினை பிரச்சாரம் செய்கிறதா?
இப்படத்தை பார்த்து செய்தியாளர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்து இருந்தாலும், படத்தில் கிறிஸ்துவ மதத்தினை பிரச்சாரம் செய்துள்ளீர்களா என இயக்குனர் பிரபு சாலமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் பைபிளில் வரும் ஒரு வாசகத்தை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். அதாவது "உன்னிடத்தில் செலுத்தப்படும் அன்பை பிறரிடத்தில் செலுத்து - இயேசு" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இறுதியில் 'ஃபிலிம் பை இயேசு' என போடப்பட்டுள்ளது. எனவே படத்தை இயக்கியது நீங்கள் தானே எதற்கு இயேசு என்று போட்டுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "நான் எதை பின்பற்றுகிறேனோ அதை படத்தில் வைத்துள்ளேன். மதப்பிரச்சாரம் செய்ய வரவில்லை" என கூறி யாருடைய மனதையாவது கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறி வாக்குவாதத்தை நிறுத்தினர்.