'லியோ' படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் விவகாரம் குறித்து சீமான் பேட்டி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 19ம்.,தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்காத தமிழக அரசு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது. இது விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. இத்தகைய சூழலில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'லியோ' படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்று விமர்சித்தார். அப்போது 'லியோ' படத்திற்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அனைத்து திரையரங்குகளும் ஒன்று இரண்டு பேரின் கட்டுப்பாட்டில் உள்ளது - சீமான்
அதற்கு சீமான், 'சினிமா துறை என்பது முழுவதும் சிதைவுற்றுள்ளது. அனைத்தும் கார்ப்பரேட் மையமாகிவிட்டது' என்று கூறினார். தொடர்ந்து அவர், 'அனைத்து திரையரங்குகளும் ஒன்று இரண்டு பேரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. தற்போது வெளியாகும் எந்த படமும், 50, 100 நாட்கள் ஓடுவதில்லை என்பதால் சிறப்பு காட்சிகளை திரையிட்டு தான் வருமானம் ஈட்ட முடியும்' என்றும் கூறினார். மேலும் அவர், 'விஜய் திரைப்படத்தினை ஓர் பிரபல நிறுவனத்திற்கு அளிக்கவில்லை. அவர்களிடம் ஆட்சி மற்றும் அதிகாரம் உள்ளதால் தான் இவ்வாறு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்' என்று சாடி பேசியுள்ளார்.