செப்டம்பர் 17 அன்று அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறாரா நடிகர் விஜய்?
'நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி' என்ற செய்தி நீண்ட நாட்களாக பேசுபொருளாகி உள்ளது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான முதற்கட்ட பணியினை சிரமேற்கொண்டார் விஜயின் தந்தை, இயக்குனர் SA சந்திரசேகர். இருப்பினும், அப்போது விஜய்க்கு அரசியலில் ஈடுபட எண்ணம் இல்லை எனவும், அவர் தந்தையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தடையும் விதித்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மீண்டும் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்த பேச்சு மிகவும் பரவலாக உள்ளது. குறிப்பாக சென்ற மாதம், பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு, பரிசுத்தொகையை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
"நீ பற்ற வைத்த நெருப்பொன்று"....
நடிகர் விஜய் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழா, அவர் அரசியல் என்ட்ரிக்கு பிள்ளையார் சுழி என்ற பேச்சு பரவலாக எழுந்தது. அதற்கேற்றாற் போல, அந்த விழாவில் லேசாக அரசியல் கலந்தும் பேசினார். தொடர்ந்து 'கல்வித்தந்தை' காமராஜர் பிறந்தநாளன்று, மாநிலம் முழுவதும் இரவு பாடசாலை துவங்க ஆணையிட்டார். இதற்கிடையே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஒரு வேளை அரசியலில் இறங்குவதாக இருந்தால், நடிப்பதை நிறுத்திவிடுவேன் என விஜய் கூறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 17 அன்று, பெரியாரின் பிறந்தநாளை குறி வைத்து, அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.