தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை துவங்க நடிகர் விஜய் முடிவு
சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் கூட, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இருந்து 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை கொடுத்து அவர்களை கவுரவித்தார். அதனைத்தொடர்ந்து, சென்னை அருகே பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகர் விஜய், ரசிகர் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுடன், நேற்று(ஜூலை.,11)ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில், தான் அரசியலுக்கு வந்தால் நடிக்க மாட்டேன் என்றும், அரசியலில் தான் தனது முழுக்கவனமும் இருக்கும் என்றும் அவர் கூறியதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு தொகுதியிலும் 4 இடங்களிலாவது இப்பாடசாலை அமைக்கப்படும்
இந்நிலையில், வரும் ஜூலை 15ம்தேதி, 'கல்வி வளர்ச்சி நாள்'என்று போற்றப்படும் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் முதல், இரவு பாட சாலையினை துவங்க விஜய் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இந்த இரவு பாடசாலை திட்டமானது துவங்கவுள்ளநிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் 4 இடங்களிலாவது இப்பாடசாலை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பாடசாலைக்கான ஆசிரியர்களை தேர்வுச்செய்ய மாவட்ட தலைவர்களிடம் விஜய் கேட்டுக்கொண்டுள்ளாராம். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தது இளநிலை பட்டதாரியாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியம், பாடசாலை நடத்தப்படும் இடத்திற்கான வாடகை என அனைத்தும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.