
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் 2 நாளில் நடக்கவிருந்த சுபநிகழ்ச்சி, அதற்குள் வந்திறங்கிய பேரிடி
செய்தி முன்னோட்டம்
மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி *'கலக்கப்போவது யாரு'* மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தனது வித்தியாசமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்பு பல காமெடி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு புகழ் பெற்றார். தொடர்ந்து சினிமாவிலும் வாய்ப்பு பெற்ற ரோபோ சங்கர், அஜித் நடித்த விஸ்வாசம், தனுஷின் மாரி, விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சூர்யாவின் சிங்கம் 3, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை எடுத்து, தற்காலிகமாக சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார். சுகமாகிய பின் திரும்பி வந்து திரையுலகில் மீண்டும் இடம் பிடித்தார்.
உடல்நல பாதிப்பு
படப்பிடிப்பின் போது உடல்நலம் பாதிப்பு
எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை, 'காட்ஸ்ஜில்லா' திரைப்படத்தின் துரைப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில், திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் தகவலின்படி, அவரது இரைப்பை மற்றும் குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவும், பல உடல் உறுப்புகள் செயலிழந்ததும் காரணமாக, கடந்த 16ஆம் தேதி அவரை அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
சுப நிகழ்ச்சி
இருநாட்களில் சுப நிகழ்ச்சிக்கு திட்டம்
ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சின்னத்திரை நடிகையாவார். இவர்களின் ஒரே மகள் இந்திரஜா, 'பிகில்' படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். முன்னர் ரோபோ சங்கர் உடல்நலம் மீண்ட சமயத்தில் இந்திராஜாவிற்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அண்மையில் ஒரு மகன் பிறந்துள்ளார். தனது பேரனுக்கு இன்னும் இரு தினங்களில் காதுகுத்து விழா நடத்தத் திட்டமிட்டிருந்த ரோபோ சங்கர், அந்த விழாவை காணாமலே இறந்தது குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ரோபோ சங்கரின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் மறைவு செய்தி அறிந்ததும் முதல் ஆளாக துணை முதல்வர் உதயநிதி, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் நேற்று இரவே அவரது வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.