'இனி அமைதியாக இருக்க முடியாது!' குடும்ப ஆடியோ கசிவால் கொதித்தெழுந்த ராஷ்மிகா மந்தனா; 24 மணிநேர கெடு விதிப்பு
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் தனது குடும்ப உறுப்பினர் தொடர்பான ஆடியோ கிளிப் ஒன்று பரவி வருவது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது ஒருவரது தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடும் செயல் என்றும், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்மிகாவின் குடும்ப உறுப்பினர் ஒருவரால் பேசப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடனான ராஷ்மிகாவின் பழைய உறவு குறித்து சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விளக்கம்
ராஷ்மிகாவின் விளக்கம்
தனது சமூக ஊடக பக்கங்களில் இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ராஷ்மிகா, அந்த ஆடியோவில் ஒரு சிறு பகுதி மட்டுமே வெட்டப்பட்டு பகிரப்பட்டுள்ளதாகவும், அது தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாகவே தான் பல பொய்ப் பிரச்சாரங்களையும், இணையவழித் துன்புறுத்தல்களையும் சந்தித்து வருவதாகவும், தற்போது அது எல்லை மீறிவிட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களைப் பகிரும் ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
திருமணம்
விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம்
இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, ராஷ்மிகா கடந்த பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு ஹைதராபாத்தில் திரையுலகினருக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தனது வேர்களை மறக்காத ராஷ்மிகா, கொடவா கலாச்சார உடையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நேரத்தில், இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் கிளப்பப்படுவது அவரது நிம்மதியைப் பாதித்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.