Loading...
18 நாட்களில் ரூ.1,700 கோடியை நெருங்கும் ராமாயணம்: பாக்ஸ் ஆபிஸில் ரன்பீர் கபூர் - யாஷ் கூட்டணி பிரம்மாண்ட வசூல் சாதனை
ரன்பீர் கபூர், யஷ் நடித்துள்ள 'ராமாயணா' படம் உலகளவில் ₹1,700 கோடியை நெருங்கியுள்ளது.

18 நாட்களில் ரூ.1,700 கோடியை நெருங்கும் ராமாயணம்: பாக்ஸ் ஆபிஸில் ரன்பீர் கபூர் - யாஷ் கூட்டணி பிரம்மாண்ட வசூல் சாதனை

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
03:52 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் நவம்பர் 5-ஆம் தேதி வெளியான 'ராமாயணம்: பாகம் 1', 18 நாட்களில் உலகளவில் ரூ.1,700 கோடி வசூல் என்ற வரலாற்று மைல்கல்லை நெருங்கியுள்ளது. சாக்னில்க் தரவுகளின்படி, 18-வது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் ரூ.35.60 கோடி நிகர வசூல் ஈட்டியதன் மூலம், மொத்த உள்நாட்டு வசூல் ரூ.1,126.50 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ.567 கோடி வசூலித்துள்ளதால், ஒட்டுமொத்த உலக வசூல் ரூ.1,693.50 கோடியை எட்டியுள்ள நிலையில், சில வர்த்தக அறிக்கைகளின்படி படம் ஏற்கெனவே ரூ.1,700 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வசூல் சாதனை

இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை

18-வது நாளில் மட்டும் இந்திப் பதிப்பு ரூ.26.25 கோடியும், மலையாளப் பதிப்பு ரூ.3.40 கோடியும், கன்னடப் பதிப்பு ரூ.2.50 கோடியும், தமிழ்ப் பதிப்பு ரூ.2.40 கோடியும் மற்றும் தெலுங்குப் பதிப்பு ரூ.1.08 கோடியும் வசூலித்துள்ளன.

இந்தியாவில் ரூ.1,000 கோடி நிகர வசூல் என்ற இமாலய இலக்கை நோக்கிப் படம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், "ராமாயணத்தை நேர்மையாகவும் சிறப்பாகவும் உருவாக்கி மக்களுக்குப் பிடித்துவிட்டால், நிதி ரீதியாக அது நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை" எனத் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

ரூ.4,000 கோடி பட்ஜெட் 

 2028 தீபாவளிக்கு வருகிறது 'ராமாயணம்: பாகம் 2'

நடிகர் யாஷ் மற்றும் நமித் மல்ஹோத்ரா இணைந்து சுமார் ரூ.4,000 கோடி மெகா பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாகத் தயாரித்துள்ள இப்படத்தில், ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், லட்சுமணனாக ரவி துபேயும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர்.

முதல் பாகம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ராமாயணம்: பாகம் 2' திரைப்படம் வரும் 2028-ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என்றும், அதில் அனுமன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் அறிமுகமாவார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT