தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கை கோர்க்கும் ரஜினிகாந்த்
'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்க போவதுதான், தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். இதனை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், ரஜினி தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி வைக்கிறார் என்ற பேச்சு எழாமல் இல்லை. அதற்காக சில உதாரணங்கள் இதோ: ரஜினிகாந்த் தற்போது, 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குவது, நெல்சன் திலீப்குமார். இவர், 'டாக்டர்' என்ற வெற்றி படத்தை தந்தபிறகு, விஜய்யுடன் இணைந்து 'பீஸ்ட்' படத்தை இயக்கி கொண்டிருக்கும் போதுதான், ஜெயிலர் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதற்கு நடித்த 'அண்ணாத்தே' திரைப்படம், 'சிறுத்தை' சிவா இயக்கியது. தொடர்ந்து அஜித் கூட்டணியில் சில வெற்றி படங்கள் தந்த பிறகு தான், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து 'ஹிட்' பட இயக்குநர்களையே ரஜினி தேர்வு செய்கிறாரா?
'தர்பார்' படத்திற்கு, இயக்குனர், A .R. முருகதாஸ். அவருடைய ஹிட் லிஸ்ட் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 'பேட்ட' படத்திற்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜும், ஜிகர்தண்டா, இறைவி என வெற்றி படங்களை தந்திருந்தார். 'காலா' மற்றும் 'கபாலி' படங்களில் ப.ரஞ்சித்துடன் இணைந்தார். இது போல இன்னும் லிஸ்டில் நிறைய இருக்கின்றனர். ஆனால், ரஜினி மட்டுமே இந்த வெற்றி இயக்குனர் பார்முலாவை பின்பற்றுவதில்லை. பல நடிகர்களும் இதைதான் செய்கின்றனர். அதற்கு காரணமும் இல்லாமலில்லை. கோலிவுட்டில் தங்கள் இருபிடைத்தை தக்க வைத்துக்கொள்ள தொடர் வெற்றி தர வேண்டிய கட்டாயத்திற்கு நடிகர்கள் தள்ளப்படுவதே காரணம். எனினும், ரஜினிகாந்திற்கு அப்படி எதுவும் கட்டாயம் இருப்பதாக தெரியவில்லை. படங்கள் ஹிட் ஆனாலும், ஆகவிடினும், அவர் என்றென்றும் 'சூப்பர்ஸ்டார்' தான்.