ரஜினி-கமல் இணையும் படத்தை 'ஜெயிலர்' இயக்குநர் நெல்சன் இயக்குகிறாரா? புதிய தகவல்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தை, 'ஜெயிலர்' இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அண்மை செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த புதிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வலைப்பேச்சு வெளியிட்ட தகவல்படி இரு நடிகர்களும் நெல்சனின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டனராம். இந்தப் படம் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மூலம் உருவாகிறது என்பதை இருவருமே உறுதி செய்துள்ளனர். எனினும், படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ரஜினிகாந்த் முன்னதாக தெரிவித்திருந்தார்.
காரணம்
நெல்சன் தேர்வுக்கான காரணம்
நெல்சன் கூறிய ஒரு கதை ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அதுவே ரஜினி-கமல் இணையும் படத்திற்கான கதையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நெல்சன் கூறிய கதை, இரு நட்சத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், ஆக்ஷன் அம்சங்களுடன் கூடிய ஜாலியான, வெகுஜன பொழுதுபோக்கு (fun, mass-market entertainer) படமாகவும் இருந்ததே இதற்குக் காரணம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி, தனது பிளாக்பஸ்டர் படமான ஜெயிலருக்குப் பிறகு நெல்சன் கூறிய ஸ்கிரிப்ட், ரஜினி மற்றும் கமல் இருவரின் எதிர்பார்ப்புகளுக்கும் இணக்கமாக இருப்பதால், அவர் இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.