மண்டாடி படம் தமிழ் சினிமாவின் வைரம்: நடிகர் சூரியை பாராட்டிய ஆர். மாதவன்
செய்தி முன்னோட்டம்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மண்டாடி திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் ஆர். மாதவன் தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான இப்படத்தைப் பார்த்த பிறகு, படத்தின் இயக்கம், ஒளிப்பதிவு, கதைக்களம் மற்றும் நடிகர்களின் அபாரமான நடிப்பை வெகுவாகப் புகழ்ந்துள்ள மாதவன், தனது சகோதரர் சூரி குறித்து மிகுந்த பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெருமிதம்
தமிழ் சினிமாவின் வைரம் எனப் பாராட்டு
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ள மாதவன், "தமிழ் சினிமாவின் மற்றுமொரு வைரம்! என்ன ஒரு திரைப்படம், என்னவொரு ஒளிப்பதிவு!
நேர்த்தியான கதைசொல்லல், சிறப்பான இயக்கம் மற்றும் நடிகர்களின் அசாத்திய நடிப்பு... எனது தம்பி சூரியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
சாதனை
ரூ.136 கோடி வசூல் சாதனையும் அடுத்த படமும்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாரம்பரியமாக நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டிகளை (Sailboat Racing) மையமாகக் கொண்டு உருவான மண்டாடி, சூரியின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாகச் சாதனை படைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, உலகளவில் இப்படம் ரூ.136.68 கோடி மொத்த வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் ரூ.101.92 கோடி நிகர வசூல் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8 முதல் நெட்ஃபிளிக்ஸில் பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வரும் நிலையில், சூரி அடுத்ததாக இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் தனது 7-வது படத்தில் ரஜிஷா விஜயனுடன் இணைந்து நடிக்கத் தொடங்கியுள்ளார்.