சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு
'பொன்னியின் செல்வன்', சோழ வரலாற்றையும், குறிப்பாக ராஜராஜ சோழரின் மகத்துவத்தை பற்றியும் கூறும் ஒரு தமிழ் வரலாற்று புதினம். அதை தமிழ் திரைப்படமாக உருவாக்க பலரும் முயன்று தோற்றுள்ளனர். இயக்குனர் மணிரத்னத்தின் தொடர் முயற்சியால் தற்போது அது நனவாகி உள்ளது. இந்த திரைப்படம் எடுப்பதாக அறிவிக்கப்பட்டதும், பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கொண்டாடினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், தஞ்சை, திருச்சி, குவாலியர் என பல இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பெருந்தொற்று, லாக்டவுன் என பல இடர்பாடுகள் ஏற்படவே, படக்குழு பேங்க்காக், தாய்லாந்து என வெளிநாடுகளுக்கு சென்று இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பை முடித்தனர். இருப்பினும், படத்தை பற்றிய அறிவிப்புக்காவது, தஞ்சை நகரில் சோழர் படை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே வரவில்லை.
தஞ்சை பெரியகோவிலின் ராசிதான் காரணமா?
தஞ்சை பெரியகோவிலுக்கும், பிரபலங்களுக்கும் ராசி இல்லை என்பது நெடுங்காலமாக உலவும் நம்பிக்கை. ஒருவேளை அந்த நம்பிக்கையினால்தான், படக்குழு தஞ்சையை ஒதுக்குகிறதா என்ற பேச்சும் நிலவி வருகிறது. இது குறித்து, நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, "முதல் பாகத்தின் டீசர் லாஞ்சே அங்கு இருந்துதான் ஆரம்பிக்க வேண்டியது. அப்போதான் கொரோனா மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டது. அதனால் கலெக்டர் ரிஸ்க் வேண்டாம்னு சொல்லி அனுமதி அளிக்கவில்லை". "தஞ்சாவூர் கோவில் பக்கத்துல அந்த விழா நடைபெற இருந்தது. அதற்கு அனுமதி கிடைக்காததால் பின்னர் சென்னையில் இருந்து ஆரம்பித்துவிடலாம் என முடிவெடுத்தோம். இந்தமுறை திரும்ப அதற்கான முயற்சியை எடுப்போம். எங்களுக்கு தஞ்சாவூர் போகனும்னு ஆசை இருக்கு. கண்டிப்பா போவோம்" என நடிகர் கார்த்தி கூறினார்.