விட்டலாச்சார்யா வழியில் பயணிக்கும் இயக்குனர்கள்; லாபம் ஈட்டும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவில் வெற்றியை தரும் டெம்ப்ளேட்டாக சில கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். கதையின் கருவாக அதையே வைத்து கொண்டு, அதை சுற்றி நகரும் திரைக்கதையில் மட்டும், சிறிது வித்தியாசங்களை காட்டி, பல வெற்றி படங்களை தந்து, தயாரிப்பாளர்களும் லாபம் பெற்ற கதைகள் எத்தனையோ உண்டு. அண்ணன்-தங்கை பாசம், அம்மா - மகன் பாசம், காதல் என பலவிதங்கள் உண்டு. இதில் பேய் கதைகளும் அடங்கும். பழிவாங்குதல், காதல் என நவரசங்களோடு பேய் கதையும் இணைத்து, வெற்றி அடைந்த படங்கள் ஏராளம். இந்த ட்ரெண்டை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை, விட்டலாச்சார்யாவையே சேரும். 'ஜெகன் மோஹினி' படம் இன்றும் ரசிக்கப்படுவதற்கு காரணம், டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே, ரசிகர்களை நம்பும் விதத்தில் அந்த படத்தை எடுத்துக்காட்டியிருந்தார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை காப்பாற்றும் பேய் படங்கள்!
தொடர்ந்து, 'மை டியர் லிசா', ' வா அருகில் வா', 'நாளைய மனிதன்' என ஏராளமான படங்கள் அதே வரிசையில் எடுக்கப்பட்டு, ரசிகர்களை திகிலூட்டியது. நடுவில் காணாமல் போன அந்த ட்ரெண்ட், மீண்டும் சந்திரமுகி மூலம் தொடங்கியது. தொடர்ந்து காஞ்சனா, அரண்மனை, டிமான்டி காலனி, பிசாசு, தில்லுக்கு துட்டு என்று வரிசையாக அதே வரிசையில் எடுக்க தொடங்கினர். இந்த பேய் படங்களை மக்கள் இன்றளவும் ரசிப்பதில், முன்னணி நடிகர்கள் அந்த படங்களில் நடிக்க தயக்கம் காட்டுவதில்லை என செய்திகள் கூறுகின்றன. அதோடு, படங்களும் நல்ல வசூலை தருவதால், தயாரிப்பாளர்கள் லாபம் பெறுகின்றனர் என மேலும் அறியப்படுகிறது.